காவலர் குடும்ப சுய தொழில் மையம்: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவங்கி வைத்தார்

சென்னையில், காவலர் குடும்ப முன்னேற்றத்திற்காக புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர் குடும்ப சுய தொழில் மையத்தை சென்னை நகர போலீஸ் கமிஷனர் துவங்கி வைத்தார்.

சென்னை நகர காவல்துறையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்துக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். காவலர் குடும்பத்தைச் சேர்ந்த 139 குழந்தைகளுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்கை அனுமதி மற்றும் பணியின்போது உயிரிழந்த காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் மேலான கல்வி உதவி தொகையை வழங்கி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பல உதவிகளை செய்து வருகிறார். அதனைத் தொடர்ந்து காவலர் குடும்பத்திற்காக சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கும் திட்டம் நடைமுறைபடுத்தும் பணி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை, புதுப்பேட்டை, ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் ‘காவலர் குடும்ப சுயதொழில் மையத்தை‘‘ கமிஷனர் நேற்று துவங்கி வைத்தார்.

இந்த மையத்தில் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரன் என்பவர் ரூ. 3.75 லட்சம் மதிப்புள்ள 25 தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளார். அவற்றை காவலர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இந்தியாவின் பெரிய பைகள் தைக்கும் நிறுவனமான திருப்பூர் எஸ்எஸ்எம் அன்கோ நிறுவனத்தின் மூலம் தையல் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தையல் கற்றுக் கொண்ட பிறகு இந்த சுயதொழில் மையத்தில் இணைந்து தயாரிக்கும் பைகள் மற்றும் பொருட்களை வெளிநிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படையின் நல மையங்களான பல்பொருள் அங்காடி, உணவு விடுதி, கூட்டுறவு பண்டக சாலை, காய்கறி அங்காடிகளுக்கு அனுப்பி, அதன் வருவாயைக் கொண்டு, இங்கு பணிபுரியும் பெண்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர போலீஸ் தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் ஆயுதப்படை துணைக்கமிஷனர் சவுந்தராஜன், மோட்டார் வாகனப்பிரிவு துணைக்கமிஷனர் கோபால் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!