காவல் நிலையத்திலும், பொது இடங்களிலும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அறிவுரை கூறினார்.
தேனி மாவட்டம் தேனி காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் காவல்துறை நன்மதிப்புடன் நடந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதுபோல், போடி நகர் காவல் நிலையத்திலும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கி பேசியதாவது காவல் நிலையங்களிலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இடங்களிலும் பொதுமக்களிடம் காவல்துறை மிகுந்த கண்ணியத்தோடு நடக்க வேண்டும் காவல்துறை பொதுமக்கள் இடையே நட்புறவில் விரிசல் ஏற்படாதவாறும், நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் காவல்துறை செயல்பாடு இருக்க வேண்டும்.
தங்களுக்கு ஒரு பிரச்சினை, பாதிப்பு என்று காவல் நிலையத்தை தேடி வரும் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நேரத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க வந்தாலும் புகாரை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் கொடுக்க வரும் மக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்கவோ, அலைக்கழிக்கவோ கூடாது.
பொது இடங்களில் பணியாற்றும் போது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், நன்மதிப்பை அதிகரிக்கும் வகையிலும் காவல்துறை செயல்பாடு இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் நேரடியாக வந்தாலோ, தொலைபேசி வாயிலாக வந்தாலோ உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறை நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும்.
இதுபோன்ற குற்றங்களில் நடவடிக்கையை எந்த வகையிலும் தாமதிக்கக்கூடாது. காவல்துறைக்கு ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதுகுறித்து என்னிடம் தெரிவிக்கலாம். இந்த கூட்டங்களில் காவல் துணை சூப்பிரண்டுகள் ஜெபராஜ், பார்த்திபன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.