குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக் கொண்ட டோங்ரே பிரவின் உமேஷ்.
தேனி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த சாய் சரண் தேஜஸ்வி மாற்றப்பட்டு டோங்ரே பிரவின் உமேஷ் (36) கடந்த ஜூன் 5ஆம் தேதி நியமிக்கப்பட்டார். மகராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் 2016 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் தேர்ச்சியடைந்தவர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் இராமநாதபுரம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்து வந்த இவர், 2020 ஜூலையில் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த இவர், முதன் முறையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேனி மாவட்டத்திற்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தின் 15வது காவல் கண்காணிப்பாளராக டோங்ரே பிரவின் உமேஷ் இன்று காலை தேனியில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.