கைதான சீனர்களின் விவரம் கேட்டு சீன துாதரகத்திற்கு சென்னை போலீசார் கடிதம்

சீன ஆன்லைன் கந்து வட்டி செயலி விவகாரத்தில் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் சீனர்கள் விவரம் கேட்டு டில்லியில் உள்ள சீன துாதரகத்திற்கு சென்னை நகர காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

சீன ஆன்லைன் கந்துவட்டி செயலியின் மூலம் கடன் கொடுத்து இந்தியா முழுவதும் மோசடியில் ஈடுபட்ட இரண்டு சீனர்கள் மற்றும் இரண்டு நிறுவன இயக்குனர்கள் ஆகியோரை பெங்களூரில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களின் மோசடிக்கு உதவிய விவகாரத்தில் மற்றுமொரு வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர். அதனையடுத்து தனியார் கால்சென்டர் நடத்தி வந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகள் வாங்கிக் கொடுத்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் என மேலும் 4 பேரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத வெளிநாட்டு முதலீடு இருப்பதால் அமலாக்கத்துறையினரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வழக்கு ஆவணங்களை பெற்று விசாரணையை துவக்கியுள்ளனர். இந்நிலையில் சீனா ஆன்லைன் கந்து வட்டி செயலி விவகாரத்தில் முதலில் கைது கைது செய்யப்பட்ட இரண்டு சீனர்கள் மற்றும் இரண்டு நிறுவன இயக்குனர்கள் ஆகியோரை 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் சீனர்கள் வங்கிக் கணக்கு, மற்றும் அவர்களது செல்போன் அழைப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கந்துவட்டி செயலிக்கு பண முதலீடு எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதே போன்று செயலிகள் மற்றும் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்களா எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.சீனர்களுக்கு இடைத்தரகர் போன்று செயல்படும் ரியா குப்தா என்ற பெண்ணையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் ரேசர் பே என்ற செயலி மூலம்,இந்தியாவில் பணப்பரிவர்த்தனை செய்துள்ளதை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கண்டுபிடித்துள்ளனர்.அந்த நிறுவன நிர்வாகிகளையும் போலிசார் விசாரணை செய்ய உள்ளனர்.குறிப்பாக சீனர்கள் நடத்தும் அனைத்து லோன் செயலிகளுக்கும்,

சீனாவிலிருந்து 100 கோடி அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,அதை இரட்டிப்பாக்கி 200 கோடியாக திருப்பி செலுத்துவதுதான் பிடிபட்ட சீனர்களுக்கு டார்கெட்டாக கொடுக்கப்பட்டுள்ளது.இது போன்று பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த கோடிக்கணக்கான ரூபாய் எவ்வாறு வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கும்,இந்தியாவிலிருந்து வெளிநாடுக்கும் கைமாறுகிறது என கண்டுபிடிப்பதில் சவலாக உள்ளது.எவ்வாறு ஆர்.பி.ஐ மற்றும் மத்திய அரசிடம் சிக்காமல் எவ்வாறு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது என அமலாக்கத்துறை விசாரணையை துவக்கி உள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சீனர்கள் பாஸ்போர்ட் ஆய்வு செய்கையில், காலாவதியான விசா வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களின் விவரம் குறித்தும் ,குற்றபின்னணி குறித்தும் டெல்லியில் உள்ள சீன தூதரகத்தில் தகவல் கேட்டு சென்னை போலிசார் கடிதம் எழுதியுள்ளனர்.இந்தியா- சீனா உடனான தற்போதைய உறவு நிலையை பொறுத்த வரையில், பிடிபட்ட சீனர்கள் குறித்த முழுத்தகவல் சீன நாட்டிலிருந்து கிடைப்பது சவாலான நிலையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!