கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் அத்தியாவசியமற்ற பயண தடையை வருகிற மார்ச் 21 வரை நீட்டித்து உள்ளது.
வாஷிங்டன்,கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் அதிகரித்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச்சில் அந்நாட்டிற்கும், கனடாவிற்கும் இடையேயான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
எனினும், அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுடனான தனது நில எல்லைகளில் அமெரிக்கா சில கட்டுப்பாடுகளை விதித்தது. அவற்றை நீட்டித்தும் வந்தது.
இதன்படி, அமெரிக்காவில் இருந்து கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு செல்லும் எல்லை பகுதிகளில் பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்த தடை வருகிற 21ந்தேதியுடன் காலாவதியாகிறது.
இதனை முன்னிட்டு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், எங்களுடைய குடிமக்களை காப்பதற்காகவும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் தங்களது நில எல்லைகளில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடையை வருகிற மார்ச் 21ந்தேதி வரை நீட்டிக்கிறது என தெரிவித்து உள்ளது. எனினும், அத்தியாவசிய வர்த்தகம் மற்றும் பயணம் ஆகியவை தொடர்ந்து செயல்படுவதனை உறுதி செய்வதற்கான பணியையும் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளது.