கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்றதை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடையாக வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வேண்டுகோளுக்கேற்ப முதலமைச்சரிடம் கோவை மாவட்டத்தில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, சைமா அமைப்பின் சார்பில் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் 2 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சக்தி குழுமத்தின் சார்பில் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, பிரிக்கால் குழுமத்தின் சார்பில் வனிதா மோகன் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.
அதே போல கோ. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் டாக்டர் ரகுபதி வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, பி.எஸ்.ஜி. குழுமத்தின் சார்பில் ரங்கசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, ரூட்ஸ் குழுமத்தின் சார்பில் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனத்தின் சார்பில் 3 கோடி ரூபாய்க்கான காசோலை, இராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை சார்பில் லட்சுமி நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்கள்.
மேலும் கேஎன்ஆர் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் 2 கோடி ரூபாய்க்கான காசோலை, சாந்தி பீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, ஜி.வி.ஜி. பேப்பர் குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, தமிழ்நாடு ரைஸ்மில் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, ஜெம் மருத்துவமனை சார்பில் டாக்டர் பழனிவேல் 25 லட்சம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் மொத்தம் ரூ. 32 கோடி என குவிந்தது.
இந்த நிகழ்வின்போது, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் எஸ். நாகராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.