சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மகனின் மனைவி கொலையை அரங்கேற்றியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய மும்பைக்கு தனிப்படை விரைந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட தலி சந்த் தனது மனைவி, மகன் மற்றும் கொலையாளி மருமகள் ஜெயமாலாவுடன்
சென்னை, சவுகார்பேட்டை, விநாயகர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலி சந்த் (74). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா பாய் (வயது 70) மற்றும் மகன் சீத்தல் (வயது 38). நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் தலி சந்தின் மகள் பிங்கி பெற்றோரைப் பார்ப்பதற்காக அங்கு வந்தார். அப்போது தலி சந்த், புஷ்பா பாய், சீத்தல் 3 பேரும் படுக்கையறை கட்டிலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். தகவல் கிடைத்ததும் யானைக்கவுனி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண், இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கொலையாளி ஜெயமாலா இவர்தான்
இவர்தான்முதற்கட்ட விசாரணையில் மருமகள் ஜெயமாலா கைத்துப்பாக்கியால் மாமனார் உள்பட மூவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலி சந்த் குடும்பத்தினருக்கும், மகன் சீத்தலின் மனைவி ஜெயமாலா குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமாலா கணவரைப் பிரிந்து மும்பையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் ரூ. 5 கோடி ஜீவனாம்சம் கேட்டு புனே கோர்ட்டில் ஜெயமாலா வழக்கும் தொடர்ந்துள்ளார். அது தொடர்பாக தலி சந்தின் வீட்டுக்கு ஜெயமாலா குடும்பத்தினர் அடிக்கடி வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்தான் ஜெயமாலா மீண்டும் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் தனது இரு சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் மும்பையிலிருந்து காரில் சென்னைக்கு வந்துள்ளார். கணவர், மாமியார், மாமனாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றியதால் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் மூவரையும் நெற்றிப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். சைலன்சர் துப்பாக்கியை பயன்படுத்தியதால் சுடும் போது சத்தம் வெளியே கேட்கவில்லை எனவும் போலீசார் கருதுகின்றனர். மேலும் ஜெயமாலா தனது சகோதரர்களுடன் காரில் மும்பைக்குத் தப்பிச் சென்று விட்டார் போன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஜெயமாலா மற்றும் அவருடன் வந்த அவரது சகோதரர்கள் உறவினர்களின் புகைப்படத்தை சேகரித்து அவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜெயமாலாவுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? அது கள்ளத்துப்பாக்கியா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்க சென்னை வடக்கு மண்டல இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் ஜெயமாலாவை கைது செய்ய மும்பைக்கு விரைந்துள்ளனர்.