சூயஸ் கால்வாயில் சிக்கி உள்ள 400 மீற்றர் நீளமான சரக்கு கப்பலை அப்புறப்படுத்தும் பணிகளில் முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை காலை கப்பல் மீண்டும் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.
இழுவை படகுகளை கொண்டு முயற்சித்ததில் லேசாக நகரும் நிலையில், கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளதாகவும் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் சூயஸ் கால்வாயில் கப்பலை நகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் இருந்து 18,300 கொள்கலன்களுடன் எவர் கிரீன் என்ற கப்பல் கடந்த 22 ஆம் திகதி சூயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்காக சிக்கிக்கொண்டது.
கடந்த சில நாட்களாக இயந்திரங்கள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கப்பலை இழுப்பதும், தள்ளுவதும் போன்ற பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த கப்பல் தற்போது கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.