சென்னை நகரில் கடந்த ஓராண்டில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் போதை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கொலை, கொள்ளைகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகர காவல் எல்லைக்குள் 2020ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பதிவான 173 கொலை வழக்குகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 147 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த 147 கொலை வழக்குகளும் துப்புத்துலக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல செயின் பறிப்புக் குற்றங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த 310 செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 246 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ள நிலையில் போதை கடத்தல் தொடர்பான சம்பவங்களில் அதிக அளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் தொடர்பாக 452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,128 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,966 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றதும் ‘கிரைம் அக்கெய்ன்ஸ்ட் டிரக்’ என்ற பெயரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக எடுத்த முயற்சியின் பயனே இது.
மேலும் சென்னை நகரில் செல்போன் பறிப்பு தொடர்பாக 938 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருடு போன மற்றும் தொலைந்து போன சம்பவங்களில் சம்பந்தப்பட்ட 2,834 செல்போன்கள் காவல் துறையினரால் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
.
சென்னை நகரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள சைபர்கிரைம் காவல் நிலையங்கள் மூலம் 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,925 சமூக பணி பதிவேடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த நபர்களுக்கு ரூ. 1 கோடியே 52 லட்சத்து 61 ஆயிரத்து 932 திரும்பப் பெற்றுத்தரப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டிருந்த 15 நிறுவனங்கள் சைபர்கிரைம் போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளன. காவல் அதிகாரிகளின் முகநூல் கணக்கைப் போன்று ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.