சென்னையில் தொடரும் கஞ்சா வேட்டை: 10 கிலோ கஞ்சா, கார், ஆட்டோ பறிமுதல்

சென்னை, பெரியமேடு, மதுரவாயல் மற்றும் முத்தாபுதுப்பேட்டை பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் 10 கிலோ கஞ்சா, ரூ. 10 ஆயிரம் ரொக்கம், கார், ஆட்டோ, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை நகரில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதால் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரியமேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் சுதாகர், திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில் பெரியமேடு போலீசார் அது தொடர்பாக தீவிரமாகவிசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே கண்காணித்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பூரைச் சேர்ந்த சூர்யா (வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின்னர் சூர்யா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல சென்னை வளசரவாக்கம் பகுதியில் மதுரவாயல் போலீசார் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் ரோந்து சென்றனர். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் நின்றபடி கஞ்சா விற்பனை செய்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த
காமராஜ் (40) என்பவர் பிடிபட்டார். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.10 ஆயிரம்- மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் அங்குள்ள ஏஎன்எஸ் நகர் அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த நபர்கள் போலீசாரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அங்கு விரைந்சென்று காரை சோதனை செய்த போது உள்ளே 7 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கஞ்சாவுடன் காரை காவல் நிலையம் எடுத்து வந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!