சென்னை, கிண்டியில் நகைப்பட்டறையில் 106 பவுன் நகைகளை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து 78 பவுன் நகைகளை மீட்டனர்.
சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் செயின் கிராப்ட் என்ற பெயரில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் கமலேஷ்குமார் (வயது 42). இவரது பட்டறையில் வேலை செய்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 பேர் நகை செய்வதற்காக கொடுத்த 106 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு கடந்த மாதம் 10ம் தேதி தப்பியோடி விட்டனர். அது தொடர்பாக கமலேஷ்குமார் கிண்டி போலீசில் புகார் அளித்தார்.
அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நான்குபேரும் சென்னையில் இருந்து திருடப்பட்ட நகைகளுடன் வெளிமாநிலம் தப்பியோடியது தெரியவந்தது. அதனையடுத்து இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையில் எஸ்ஐ ஸ்ரீதர், தலைமைக் காவலர் அச்சுதராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் மேற்கு வங்காளம் விரைந்தனர்.
அங்கு தனிப்படையினர் முகாமிட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியதில் நகை கொள்ளையடித்த நான்கு பேரும் வெவ்வேறு திசையில் தப்பிச்சென்றது தெரியவந்தது சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதனையடுத்து நகைப்பட்டறையில் நால்வரும் கொடுத்திருந்த ஆதார் கார்டில் உள்ள முகவரியான மேற்கு வங்காளத்திற்குச் சென்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் கொள்ளையடித்த நகைகளில் 1 பவுனை மட்டும் அடமானம் வைத்து அதில் வந்த பணத்தைக் கொண்டு நால்வரும் வெவ்வெறு இடங்களுக்கு பிரிந்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். அதனையடுத்து தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் வர்தமான் பகுதியில் பதுங்கியிருந்த சராபிந்து (வயது 24) என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தனது சொந்த ஊரான கேரளாவில் நகைகளை விற்றதாக தெரிவித்தார். அதன் பேரில் 8 கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மேற்கு வங்காளத்தில் பரத்பூர் என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான பஷிருள் சேக் (வயது 24) என்ற நபரும் பிடிபட்டார். அவரது வீட்டின் கழிவறையில் தரையில் புதைத்து வைத்திருந்த இருந்த 364 கிராம் தங்க நகைகளை போலீசார் தோண்டி எடுத்து மீட்டனர்.
சராபிந்து, ஷேக் இருவரிடமும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான பிரசான் மாதுரி (வயது 26) என்பவரை தலைமைக் காவலர் தாமோதரன் ஐசக் மற்றும் ஜானி சதீஸ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 254 கிராம் தங்க நகைகளை கைப்பற்றினர். இந்த வகையில் 626 கிராம் எடையுள்ள மொத்தம் 78 பவுன் தங்க நகைகளை தனிப்படை போலீசார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட சராபிந்து உள்பட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நகைப்பட்டறையில் திருடிய 3 பேரை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.