சென்னையில் போலி கால்சென்டர் நடத்தி அதன் மூலம் பொதுமக்களின் வங்கி விவரங்களை பெற்று பல லட்சம் மோசடி செய்த நாமக்கல்லைச் சேர்ந்த மோசடி கும்பல் 5 பேரை சென்னை அடையாறு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி அவருக்கு ஒரு தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் டாடா கேபிட்டல்
நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். குறைந்த வட்டியில் ரூ. 2 லட்சம் லோன் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
பெண்ணின் பேச்சை நம்பிய கருப்பையா தனக்கு லோன் வேண்டுமென்று கேட்டுள்ளார். அவர்கள் கருப்பையாவின் ஆதார்கார்டு, ஏடிஎம் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி இருப்பு விவரங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பச் சொல்லியுள்ளனர். கருப்பையா அப்படியே செய்துள்ளார். அதனையடுத்து லோன் தொகையினை செலுத்த இப்போது உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை தெரிவியுங்கள் என கூறியுள்ளனர். தனது செல்போனுக்கு வந்த 6 இலக்க ஓடிபி எண்ணை கருப்பையா அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அடுத்த நிமிடம் அவரது அக்கவுண்டில் இருந்து
பணம் பறிபோனது. அது தொடர்பாக அவர் போன் செய்து கேட்ட போது அவர்கள் பணத்தை திரும்ப தரமுடியாது என கூறி தொடர்பை துண்டித்துள்ளனர்.
அப்போதுதான் அவர்கள் மோசடி ஆசாமிகள் என கருப்பையாவுக்கு தெரியவந்தது.
தான் இழந்த பணத்தை மீட்டுத்தரும்படி கருப்பையா அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனிடம் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக அடையாறு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து கருப்பையாவிடம் மோசடி செய்த நாமக்கல் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த குமரேசன் (28) மற்றும் 3 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித்தகவல்கள் வெளிவந்தன.
பள்ளிப்பாளையத்தில் ‘பெதர்லைக் டெக்’ என்ற பெயரில் கால் சென்டர் அலுவலகம் வைத்து நடத்திய அதில் 9 பெண்களை வேலைக்கு அமர்த்தி லோன் பெறுவதற்காக முயற்சிப்பவர்களின் ஆதார் கார்டு, பான் கார்டு, ஏடிஎம் கார்டு விவரங்களை வாட்ஸ்அப் மூலம் கேட்டுப் பெற்றுள்ளார். பின்பு வழக்கம் போல அவர்களிடம் ஆன்லைன் மூலம் பணத்தை அபேஸ் செய்துள்ளனர் போன்ற விவரங்கள் தெரியவந்தன. கருப்பையா போன்று 30க்கும் மேற்பட்ட நபர்களை குமரேசன் தனது கால் சென்டர் மூலம் ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள், 3 லேண்ட் லைன் போன்கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கால் சென்டர் என்ற பெயரில் அப்பாவி மக்களை லோன் தருவதாக ஏமாற்றி மோசடி செய்த கும்பலை கண்டறிந்த சைபர் கிரைம் குழுவினர் மற்றும் கைது செய்த மற்றும் தனிப்படையினரை சென்னை போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.