சென்னையில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னையில் 3 இடங்களில் போலீசார் நடத்திய ரெய்டில் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் டிபி சத்திரம் போலீசார் நேற்று முன்தினம் சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டன் ரோடு, நியூ ஆவடி ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அங்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த அண்ணாநகர் கிழக்குப்பகுதியைச் சேர்ந்த பிரவீன் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ஐசிஎப் போலீசார் அம்பேத்கார் ரோடு சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த செனாய் நகரைச் சேர்ந்த மார்டின் (எ) மார்டின் ராஜ், பாடியைச் சேர்ந்த ஜான்சன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கர்நகர் போலீசார் பொழிச்சலூர், கருப்பன் தெரு சந்திப்பில் பொழிச்சலுாரைச் சேர்ந்த பிண்டுஷேக் (28) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பிண்டு ஷேக் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Translate »
error: Content is protected !!