சென்னை அண்ணாசாலையில் மீன் வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி ரூ. 5 ஆயிரம் அபேஸ்

சென்னையில் வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி ரூ. 5 ஆயிரம் பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). சென்னை அண்ணாசாலை ஜிபி ரோட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 18ம் தேதியன்று டிப்டாப் ஆசாமி ஒருவர் ராமலிங்கத்திடம் வந்து நைசாக பேச்சு கொடுத்தார். தான் சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களுக்கும் வஞ்சிரம் மீன் சப்ளை செய்பவர் என கூறி பெரிய அளவில் மீன் பிஸ்னஸ் கிடைக்கச் செய்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும் எல்ஐசியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வாரம் ஒரு முறை 10 கிலோ வஞ்சரம் மீன் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.

அதனைக் கேட்ட ராமலிங்கம் அவரிடம் நெருங்கிப்பழகியுள்ளார். அதனையடுத்து ராமலிங்கத்தை அந்த டிப்டாப் ஆசாமி பத்து கிலோ மீனுக்கு முதலில் அட்வான்ஸ் பணம் வாங்கித்தருகிறேன் வா என கூறி தன்னுடன் ராமலிங்கத்தை அண்ணாசாலை எல்ஐசி கட்டம் அருகே தனது இருசக்கரவாகனத்தில் அழைத்துச்சென்றார்.

எல்ஐசி கட்டடம் உள்ளே சென்ற அவர் பின்னர் போன் பேசிக்கொண்டே வெளியில் வந்தார். ஓட்டல் மேலாளருக்கு ஐயாயிரத்துக்கு சில்லரை வேண்டும் என ராமலிங்கத்திடம் கூறியுள்ளார். ராமலிங்கமும் தன்னிடம் இருந்த ஐயாயிரத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அந்த நபர் வாழை இலை வாங்க வேண்டும் அந்த டீக்கடையில் போய் வாழை இலை வாங்கி வாருங்கள் என கூறி ராமலிங்கத்திடம் ஐம்பது ரூபாயை கொடுத்துள்ளார்.

அதனை வாங்கிக் கொண்டு ராமலிங்கம் வாழை வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அந்த டிப்டாப் ஆசாமியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த ராமலிங்கத்துக்கு தான் ஏமாற்றப்பட்டது அப்போதுதான் தெரியவந்தது. இது தொடர்பாக அவர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ராமலிங்கத்தின் கவனத்தை திசை திருப்பி பணத்தை அபேஸ் செய்த அந்த பலே ஆசாமியை தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!