சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கனக்கான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தது.
சென்னை வில்லிவாக்கம் அடுத்த நியூ ஆவடி சாலையில் ஐசிஎப் தொழிற்சாலையில் ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ரயில் பெட்டிகளுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் உதிரி பாகங்கள் அங்குள்ள 54வது எண் சேமிப்பு கிடங்கு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 5, 000 சதுர அடி பரப்பளவு கொண்ட குடோனில் பற்றிய தீயை ஐசிஎப், வில்லிவாக்கம், அண்ணா நகர், செம்பியம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, டெபுடி டைரக்டர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்து தொடர்பாக ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.