சென்னை திநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி, கார் டிரைவரை அரிவாளால் மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டு 250 பவுன் நகைகள் மற்றும் கார் ஆகியவற்றை மர்நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, திநகர், சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் நுாருல்ஹக் (வயது 71). அங்குள்ள தனது சொந்த வீட்டில் மனைவி ஆயிஷா மற்றும் மனைவியின் சகோதரர் தானிஷ், கார் டிரைவர் அப்பாஸ் உள்ளிட்டோருடன் வசிக்கிறார். துபாயில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டைரக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் நுாருல் ஹக்கின் மனைவியின் உறவினர்களான துாத்துக்குடி காயல்பட்டினத்தைச் சேர்ந்த மொய்தீன் (29) மற்றும் முஸ்தபா ஆகியோர் என்பவர் கடந்த 9 நாட்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் கைகளில் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கும்பல் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி நுாருல்ஹக் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டு வாசலில் படுத்திருந்த கார் டிரைவர் அப்பாஸை அரிவாளைக் காட்டி மிரட்டி வாயில் துணியை திணித்து கைகளை கட்டிப்போட்டனர்.
பின்பு வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் நுாருல்ஹக், ஆயிஷா, தானிஷ் மற்றும் முஸ்தபா, மொய்தீன் உள்ளிட்ட 7 பேரையும் அரிவாளால் வெட்டுவதாக மிரட்டி அவர்களையும் கை, கால்களை கட்டி அவரவர் தங்கியிருந்த அறைகளில் தள்ளி பூட்டியுள்ளனர். அவர்களிடம் பீரோ சாவியை பிடுங்கி அதில் வைக்கப்பட்டிருந்த 250 பவுன் தங்க நகைகள், 95 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள திஸ்ஸோட் வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்பு கொள்ளையடித்த பொருட்களை ஏற்றிக் கொண்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா சிட்டி கார் மற்றும் ஆட்டோவை கடத்திச் சென்றனர். வீட்டில் இருந்த முஸ்தபாவையும் தங்களுடன் அழைத்துச் சென்ற அவர்கள் போகும் போது ஆயிஷாவின் கட்டுகளை மட்டும் அவிழ்த்து விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்பு இரவு 8.30 மணியளவில் தி.நகர் ஜிஎன் செட்டி ரோட்டில் உள்ள போத்தீஸ் துணிக்கடை அருகில் வைத்து முஸ்தபாவையும், ஆட்டோவையும் விடுவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்தபாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவருக்கு இந்த கொள்ளையில் தொடர்பிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய போலீஸ் நிலையத்தில் வைத்து முஸ்தபாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முஸ்தபா தனது வீட்டில் நுாருல் ஹக் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்றால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து தனக்கு கொரோனா பரவியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனைக்காக சளியை எடுத்துச் சென்றதாக முஸ்தபா அதிர்ச்சிததகவலலை வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் முஸ்தபாவிடம் விசாரணை நடத்திய பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் மற்றும் தேனாம்பேட்டை உதவிக்கமிஷனர் ஆகியோருக்கும் கொரோனா சோதனை எடுத்துள்ளனர். இந்நிலையில் முஸ்தபாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா ரிசல்ட் நேற்று காலையில் பாசிட்டிவ் என வந்துள்ளது.