சென்னை வில்லிவாக்கத்தில் நண்பனின் நினைவு நாள் விழாவிற்கு சென்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக 6 பேர் கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை அயனாவரம், வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந்தவர் மதன் (வயது 26). பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு மதனின் நண்பர் பிரபா தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் ரேசில் ஈடுபட்டு விபத்தில் உயிர் இழந்தார். பிரபாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சென்னை, வில்லிவாக்கம், மோகன் ரெட்டி ஆஸ்பத்திரி அருகே நேற்று நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக தனது நண்பர்களோடு மதன் அங்கு சென்றார். அங்கு குடிபோதையில் இருந்த அவரை 13 பேர் கும்பல் மதனை சராமாரியாக வெட்டிக் கொன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு சரவணன், டபுள் ரஞ்சித், நவின்குமார், குட்டி (எ) பாலாஜி, தீனா, மாவா கார்த்திக் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை வில்லிவாக்கம் போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 2 கொலைகள் செய்ததால் மதன் வில்லிவாக்கம் பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். மதனுடன் சிறைக்கு சென்ற ராஜேஷ் என்பவருடன் மதனுக்கு சமீபத்தில் சாவு ஊர்வலம் ஒன்றில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ் தரப்பினரை மதன் தாக்கியுள்ளார். இதற்கு பழி தீர்க்க நேரம் பார்த்து காத்துகொண்டிருந்த நிலையில் ராஜேஷின் கூட்டாளிகள் மதனை கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.