சொத்து தகராறில் மகனே தந்தையை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி, ஏர்போர்ட், அழகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால்(81). இவர் திருச்சி பெல் (BHEL) ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி லீலாவதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக மரணம் அடைந்த நிலையில், இவருக்கு கிருஷ்ணவேணி, கீதா, ஹேமா, பிரேமா என்ற நான்கு மகள்களும், ரவி, பிரபோத சந்திரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இதில் 4 மகள்கள், 1 மகன் என ஐந்து பேர் திருமணமாகி பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக வசிக்கின்றனர். நந்தகோபால் தனது நான்காவது மகன் பிரபோத சந்திரன் என்பவருடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். திருமணமாகாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட நான்காவது மகன் பிரபோத சந்திரன் திருச்சி தனியார் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், இன்று சென்னையில் நடைபெறும் நந்தகோபாலின் பேத்தி மஞ்சள் நீராட்டு விழா தொடர்பாக நேற்று இரவு தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்கும் படியும், சொத்தில் பாகம் கேட்டும் தந்தை நந்தகோபாலிடம் தகராறில் ஈடுபட்ட பிரபோத சந்திரன். ஆத்திரத்தில், வீட்டிலிருந்த குழவிக் கல்லை எடுத்து தந்தையின் முன்னந்தலையில் அடித்துள்ளார்.

கீழே விழுந்த நந்தகோபால் பின்னந்தலையிலும் அடிபட்டு மரணம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட மகன் பிரபோத சந்திரன் தனது தந்தையை தானே அடித்துக் கொலை செய்து விட்டதாக திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி, மகன் பிரபோத சந்திரனை கைது செய்துள்ளனர். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த மகன், சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!