சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட 15 நாட்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் சமாதி அருகில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இதனை கடந்த மாதம் 27ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 6 நாட்களாக திறந்து இருந்த ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட வந்த பலர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். சமாதி அருகில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை அமைப்பு கட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் நின்று செல்பி எடுத்தும் பொதுமக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.
அத்துடன் நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகள் அனைத்தும் பொதுமக்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அருகில் ரூ.12 கோடி மதிப்பில் டிஜிட்டல் முறையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனுடைய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து விட்டன. மெருகேற்றும் பணிகள் நடந்து வருகிறது.
குறிப்பாக அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், உற்சாக மூட்டும் வார்த்தைகள், சிறுகதைகள், படங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது தினசரி ஆயிரக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட வருபவர்களால் அருங்காட்சியகத்தில் நடக்கும் மின்சார வேலைகளுக்கு தடை ஏற்படுகிறது. பணிகள் தடைபடாமல் இருக்க பார்வையாளர்கள் நலன் கருதி அடுத்த 15 நாட்களுக்கு ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்படுகிறது.
இம்மாத இறுதியில் அருங்காட்சியகம் முறையாக திறக்கப்பட்ட உடன் நினைவிடத்தையும், அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் கண்டு கழிக்க முடியும். அதுவரை பார்வையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.