தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணியுடன் காய்கறி மற்றும் மளிகை கடைகள் அடைப்பு

அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 10 மணியுடன் முழுவதுமாக அடைக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு உத்தரவின் படி, இன்று காலை 10 மணியுடன் காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 10 மணியுடன் கடைகள் அடைக்கப்படும் என்ற அறிவிப்பால், மளிகை மற்றும் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் கடைகளில் கூடியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு வியாபாரம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடைகளை திறந்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  

அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா பூ மார்க்கெட் காலை 10 மணியுடன் மூடப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்புறம் உள்ள காய்கறி சந்தையில், பொதுமக்கள் கொரோனா பயம் இல்லாமல், தனிமனித இடைவெளி இன்றியும், முகக்கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Translate »
error: Content is protected !!