தமிழகத்தில் நேற்று 305 ஆண்கள், 207 பெண்கள் என மொத்தம் 512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

சென்னை

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 54 லட்சத்து 97 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 305 ஆண்கள், 207 பெண்கள் என மொத்தம் 512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 159 பேரும், கோவையில் 51 பேரும், செங்கல்பட்டில் 28 பேரும், திருவள்ளூரில் 26 பேரும், திருப்பூரில் 23 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விருதுநகரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் நேற்று ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை.

மேலும் 13 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 5 ஆயிரத்து 456 ஆண்களும், 3 லட்சத்து 30 ஆயிரத்து 825 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 169 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 831 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 8 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 564 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 162 பேரும், கோவையில் 65 பேரும், செங்கல்பட்டில் 58 பேரும், திருவள்ளூரில் 25 பேரும், திருப்பூரில் 23 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 19 ஆயிரத்து 306 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 676 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 54 லட்சத்து 97 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!