தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுழற்சி அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பரனூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, கப்பலூர், நாங்குநேரி, எட்டூர்வட்டம், பூதக்குடி, சிட்டம்பட்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, வாகைகுளம், ஆத்தூர், பட்டறை பெரும்புதூர், எஸ்.வி.புரம், லட்சுமணப்பட்டி, லெம்பலாக்குடி, நல்லூர், போகலூர், கந்தர்வக்கோட்டை, சாலைபுதூர், செண்பகம்பேட்டை, திருப்பாச்சேத்தி, கன்னியூர் ஆகிய 24 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறும்போது, ‘‘கரோனா பாதிப்பால் லாரி தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த சூழலில், சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.30வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள்,லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். பொருட்கள் விலையும் உயரும்’’ என்றார்.