தமிழகத்தில் 6 ஆயிரத்து 971 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்

தமிழகத்தில் நேற்று 682 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 971 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தில் நேற்று 406 ஆண்கள், 276 பெண்கள் என மொத்தம் 682 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 201 பேரும், கோவையில் 71 பேரும், செங்கல்பட்டில் 44 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தென்காசியில் தலா இருவரும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், விழுப்புரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் புதிய பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 26 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 801 ஆண்களும், 3 லட்சத்து 27 ஆயிரத்து 108 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 ஆயிரத்து 672 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 788 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் இருவரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக சென்னையில் 3 பேரும், தஞ்சாவூர், திருவள்ளூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 33 மாவட்டங்களில் நேற்று உயிரிழப்பு இல்லை. இதுவரையில் தமிழகத்தில் 12,228 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 869 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 744 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 6 ஆயிரத்து 971 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 45 லட்சத்து 78 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 24 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த மாதம் டிசம்பர் 23-ந்தேதி வரை தமிழகம் வந்த 2 ஆயிரத்து 300 பேரில், 2,146 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 2,122 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை இங்கிலாந்தில் இருந்து மேலும் 17 பயணிகள் வந்துள்ளனர்.

இதில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஒருவரின் முடிவு இன்னும் வரவில்லை. இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்து கொரோனா பாதிப்பு இல்லாத 2,122 பயணிகளுடன் தொடர்பில் இருந்த 3 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!