தாலிச்செயினை மீட்டுக் கொடுத்த துணைக்கமிஷனருக்கு நினைவுப்பரிசு வழங்கிய வயதான தம்பதி

கொள்ளையர்களிடம் பறிபோன தாலிச்சங்கிலியை மீட்டுக் கொடுத்த அடையாறு துணைக்கமிஷனரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வயதான தம்பதிகள் தாங்களே தயாரித்த கைவினைப்பொருளை நினைவுப்பரிசாக வழங்கியது காவல்துறையினரை நெகிழ வைத்துள்ளது.

சென்னை, நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 65). கைவினைப் பொருட்கள் செய்து விற்பனை செய்து வருபர். இவரது மனைவி கடந்த மாதம் 29ம் தேதியன்று ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அது தொடர்பாக அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் நீலாங்கரை உதவிக்கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடம் முதல் அடுத்தடுத்துள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை விடாமுயற்சியாக ஆய்வு செய்து முன்னால் செயின் பறிப்பு கொள்ளையன் நடராஜ் (எ) நவமணி (வயது 28) என்பவரை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 5 சவரன் செயினையும் கைப்பற்றி புகார்தாரர் கருணாகரனிடம் ஒப்படைத்தனர். தான் பறிகொடுத்த செயினை திரும்பப் பெற்ற மகிழ்ச்சியில் கருணாகரனும் அவரது மனைவியும் நேற்று முன்தினம் சென்னை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

அவருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்த அவர்கள் கடந்த பத்து நாட்களாக தான் கைப்பட செய்த பிள்ளையார் ஓவியத்தை நினைவுப்பரிசாக துணைக்கமிஷனர் விக்ரமனுக்கும், நீலாங்கரை உதவிக்கமிஷனர் விஷ்வேஷ்வரய்யாவுக்கும் வழங்கினர். புகார்தாரர் மனம் மகிழ்ந்து காவல்துறை அதிகாரிக்கு தங்களது நினைவாக அன்புப்பரிசை வழங்கியது அடையாறு காவல் மாவட்ட போலீசார் மத்தியில் நெகிழ்வை ஏற்படுத்தியது.

Translate »
error: Content is protected !!