பெட்ரோல் விலை தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 8 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஏறக்குறைய இரண்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்ததால் பெட்ரோல் விலை தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் லிட்டருக்கு 8 காசுகள் உயா்த்தப்பட்டது. ஒரு லிட்டா் டீசலின் விலை 19 காசுகள் அதிகரிக்கப்பட்டது.இதையடுத்து, தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோலின் விலை ரூ.81.38-லிருந்து ரூ.81.46-ஆக உயா்ந்துள்ளது.
அதேபோன்று, ஒரு லிட்டா் டீசல் விலையும் 70.88-லிருந்து ரூ.71.07-ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் விற்பனை விலை ரூ.88.09-லிருந்து ரூ.88.16-ஆகவும், டீசல் விலை ரூ.77.34-லிருந்து ரூ.77.54-ஆகவும் உயா்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோலியப் பொருள்களின் விலையை தொடா்ந்து உயா்த்தி வருகின்றன. கடந்த மூன்று நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசுகளும் உயா்ந்துள்ளன.
உள்ளூா் விற்பனை வரி அல்லது வாட் வரிகளைப் பொருத்து பெட்ரோலியப் பொருள்களின் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.