நிவர் புயல் கனமழையின் போது, இடிந்து விழும் நிலையில் இருந்த வீட்டுக்குள் சிக்கித்தவித்த வாலிபரை உயிருடன் மீட்ட பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த போக்குவரத்து போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக நற்சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தலைமைக் காவலர் ஸ்ரீகுமரன், முதல் நிலைக்காவலர் ஜலஜாகுமாரி, ஆயுதப்படை காவலர் இளங்கோவன் ஆகியோர் கடந்த 26ம் தேதியன்று நிவர் புயலின் போது மீட்புப்
பணியில் ஈடுபட்டனர். அன்றைய தினம் இரவு 11 மணியளவில் கீழ்பாக்கம், சாமிதாசபுரம், குடிசைப் பகுதியில் நிவர் புயல் தொடர் மழை காரணமாக யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என பழைய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் கண்காணித்தனர். அப்போது அங்குள்ள குறுகலான சந்தில் உள்ள பழமையான இடியும் நிலையில் உள்ள வீட்டில் வசித்த வாலிபர் கணேஷ் (வயது 33) என்பவர் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தார்.
இதனைக் கவனித்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி அந்த குறுகலான சந்திப்பில் உள்ள பழமையான வீட்டிற்குள் சென்று வாலிபர் கணேஷை காவலர் குழுவுடன் மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தார். கணேஷை மீட்ட சிறிது நேரத்தில் அந்த பழமையான கட்டடம் வீடு இடிந்து விழுந்தது. போலீசார் தக்க சமயத்தில் வாலிபரை மீட்டதால் ஒரு உயிர் பலி தடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட கணேஷை அரசு முகாமில் அனுமதித்து உணவு உடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல்நிலைய தலைமைக்காவலர்கள் கதிரவன், ராமமூர்த்தி ஆகிய இருவரும் கடந்த 25ம் தேதி நிவர் புயலின் போது காலை 11 மணியளவில் நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலையில் பணியிலிருந்தனர். அப்போது நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் வடியாமால் வாகன ஓட்டிகள் பயணிக்க, சிரமமடைந்து வந்தனர். அதனையடுத்து போக்குவரத்து காவலர்கள் அங்கு பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து சிரமம் பார்க்காமல் அங்குள்ள மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை தாமாகவே சீர் செய்ய முயன்றனர். உபகரணங்கள் இல்லாத நிலையில் கைகளால் சரி செய்தனர். இதனால் மழைநீர் வடிந்து வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணித்தனர். காவல் பணிக்கு அப்பால் அர்பணிப்புடன் செயல்பட்ட போக்குவரத்து காவலர்களின் இச்செயலை பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகள் வெகுவாக பாராட்டினர்.
மேற்கண்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட செகரேட்டரியேட் காலனி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்து பாராட்டினார். அவர்களுக்கு கேடயம், நற்சான்றிதழ்கள் வழங்கி உடனமர்ந்து தேநீர் வழங்கி கவுரவித்து ஊக்குவித்தார்.