மதுரை அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் முருகநேரி, விருதுநகர் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். இதையடுத்த தாலிகுளத்துப்பட்டியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வழக்கம் போல் ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பட்டாசு தயாரிக்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. படபடவென்று பட்டாசுகள் தீப்பிழம்புடன் வெடித்து சிதறத் தொடங்கின. இதை பார்த்து அங்கிருந்த தொழிலாளர்கள் பீதியுடன் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
எனினும் இந்த கோர விபத்தில் , பட்டாசு அறை ஒன்றில் சிக்கிக் கொண்ட 3 பெண்கள் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் சிலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். காயமடைந்தவர்கள் எண்ணிக்கை, சேத மதிப்பு விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை முதல்வர் பழனிசாமி உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.