புதுக்கோட்டை, ஆவூரில் புதிதாக திருமண ஆன பெண்ணுக்கு போடப்பட்ட நகைகள் 35 பவுன் மற்றும் திருமணத்துக்கு வந்த மொய்ப் பணம் உள்பட 4.75 ரொக்கத்தை மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர், ஆம்பூர்பட்டி, நால்ரோட்டை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவர் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (45). இவர்களுக்கு ரகுபதி (27) என்ற மகன் உள்ளார். ரகுபதிக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் ரம்யா (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ரம்யா திருமணத்தின்போது, வழங்கப்பட்ட 35 பவுன் நகைகளை கணவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்தார். அதே போல் பழனிசாமி திருமணத்தின்போது, வந்த மொய்ப்பணம் மற்றும் மாடுகளை விற்ற பணம் என ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்தார். நேற்று காலையில் பழனிசாமி வெளியூரில் உள்ள அவரது உறவினரை பார்க்க சென்று விட்டார். ரகுபதி வேலைக்கு சென்று விட்டார். ரேணுகா மற்றும் அவரது மருமகள் ரம்யா ஆகிய இருவரும் நேற்று காலை 11 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு ஆடு, மாடுகளை தோட்டத்துக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
மதியம் 3 மணி அளவில் பழனிசாமி வீட்டுக்கு வந்தார். அப்போது, இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்களும் திறக்கப்பட்டு, அதில் உள்ள துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்து 72 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து மாத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.