இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்து சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்குவதால், பயணிகள் கூட்ட நெரிசலில் செல்லும் நிலைமைக்கு தள்ள படுகின்றனர். கூட்ட நெரிசலில் செல்லும் வயதானவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். சில இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதால் மக்கள் அவர்களது வேலைக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை, மக்கள் பெரும் அவதி பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்க கூட்டமைப்பு சென்னையில் அறிவித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் நேற்று முதல் தொடங்கியது. தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்புகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை, உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அரசு பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக தொமுச பொருளாளர் நடராஜன் வேலைநிறுத்தம் குறித்து பேசும் போது, “போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 18 மாதங்களாக நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அமைச்சரும், நிர்வாகமும் எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் வந்து கலந்துகொண்டதுடன், முறையான பதிலை தெரிவிக்காமல் கூட்டத்தை முடித்துக்கொண்டனர்.
தொடர்ந்து அடுத்த கூட்டம் எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை கேட்டும் பதில் இல்லை. இதனால் வேறு வழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு தள்ளப்பட்டு உள்ளோம்” என்று கூறினார்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் வழக்கதை விட குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பேருந்து போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.