மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்.
14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் 385 அரசு பேருந்துகளில் 40 பேருந்துகளே இயக்கப்படுகிறது. தற்காலிகப் பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்கலாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தாலும் நேற்று ஆலங்குடி பகுதியில் ஏற்பட்ட அரசு பேருந்து விபத்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதுக்கோட்டையில் வெறும் 15 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்துக்காக தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடியுள்ளார். அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதை சாதகமாக எடுத்துக்கொண்டு தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்ல ரூபாய் 37 ஆக இருந்தது கட்டணம். தற்போது 150 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சென்னையிலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எப்பொழுதுமே காலை 5 மணியில் இருந்தே பேருந்து சேவை தொடங்கும் நிலையில், தற்பொழுது குறைந்த பேருந்துகளே இயக்கப்படுகிறது. இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைத்துள்ளது.
இன்று மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணைய துணை ஆணையர் தலைமையில் தேனாம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணையத்துடன் நடத்தப்படும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னரே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நிலை என்னவென்று தெரியவரும்.