மருத்துவர்களை மரியாதை இல்லாமல் பேசிய போலீஸ் அதிகாரியை கண்டித்து நாளை வேலை நிறுத்த போராட்டம்..!

ராமநாதபுரம்,

மருத்துவர்களை மரியாதை குறைவாக நடத்திய போலீஸ் அதிகாரியை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோவிட் 19 பணியில் வேலை செய்யும் மருத்துவர்களை காவல்துறை துணை கண்காணிப்பாளர் குடிபோதையில் மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். மேலும் போலீஸ் ஜீப்பை ஏற்றி அராஜகம் செய்துள்ளார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் இந்த செயலை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

உயிரை பணயம் வைத்து கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்களை கொடுமைப்படுத்திய போலீஸ் அதிகாரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மாநிலம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக நாளை காலை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். அப்போது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். அடுத்த கட்டம் குறித்து நாளை முடிவு செய்யப்படும்,” என கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!