மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் இரண்டு மெட்ரோ ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதியதில் 213 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலேசியாவின், தலைநகரம் கோலாலம்பூரில் பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே சுரங்கப்பாதை உள்ளது. இதன் மெட்ரோ ரயில் தடங்கள் உள்ளன. இங்கு நேற்று ஒரே தடத்தில் நேருக்கு நேராக வந்த இரண்டு ரயில்கள் மோதின. ஒரு ரயில் காலிப் பெட்டிகளுடன் வந்தது.
மற்றொரு ரயிலில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். மோதிய வேகத்தில் பயணிகள் 213 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 47 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரு ரயில்களும் அதிவேகத்தில் பயணிக்காததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்னல் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துவிட்டதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 23 வருடங்களில் மலேசியாவில் மெட்ரோ ரயிலில் இதுபோன்ற மிகப்பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது இதுதான் முதல் தடவையாகும்.