சென்னையில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
சென்னை நகரம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் டாக்டர் என். கண்ணன் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவியரிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அவர்களுக்கு சாலை விதிகள் பற்றிய வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் சென்னை நகர காவல்துறை இணைந்து பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் நடை பிரச்சார அணிவகுப்பு நடந்தது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி ஆகியோர் இப்பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். இந்த சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர்கள் லட்சுமி, பாண்டியன், என்எஸ்எஸ் மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா, சென்னை பல்கலைக்கழக என்எஸ்எஸ் பேராசிரியை வனிதா அகர்வால் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் பேராசிரியை வனிதா அகர்வால் முன்னிலையில் பரிசளிப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் பங்கு கொண்ட போட்டிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக சிறந்த விழிப்புணர்வு குறும்படம் தயாரித்த மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவி ஜெ. திவ்யாவிற்கு முதல் பரிசும்,
குருநானக் கல்லூரி மாணவி எம்.பெருமாள் தேவிக்கு இரண்டாம் பரிசும், போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக சிறந்த விழிப்புணர்வு வாசகம் உருவாக்கிய ஸ்ரீமுத்துகுமாரசாமி, கல்லூரி மாணவர் நிர்மலுக்கு முதல் பரிசும், சென்னை பல்கலைக்கழக மாணவி பவதாரணிக்கு இரண்டாம் பரிசும், போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி, குழு புகைப்படம் எடுத்தும் பாராட்டி வாழ்த்தினார்.