சென்னை,
வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையானது, தமிழக முதலமைச்சரால், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இவ்வெளிவட்ட சாலையின் அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பின்வரும் இரண்டு புதிய வழித்தட பேருந்து இயக்கத்தினை, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், நேற்று (10–ந் தேதி) காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார்.
206 (கட்) புதிய வழித்தடம் எண் கொண்ட பேருந்தானது, பூவிருந்தவல்லியிலிருந்து புறப்பட்டு வெளிவட்ட சாலை, மண்ணிவாக்கம் இணைப்புச் சாலை, பெருங்களத்தூர் வழியாக தாம்பரம் சென்றடையும். நாள் ஒன்றுக்கு, 4 பேருந்துகள். 35 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
203 புதிய வழித்தடம் எண் கொண்ட பேருந்தானது, பூவிருந்தவல்லியிலிருந்து புறப்பட்டு வெளிவட்ட சாலை, படப்பை, ஒரகடம் இணைப்புச் சாலை வழியாக வாலாஜாபாத் சென்றடையும். நாள் ஒன்றுக்கு, 4 பேருந்துகள் 50 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில், இனிவரும் காலங்களில், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்க ஆவன செய்யப்படும்.