விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை பிரபல ஓ.டி.டி. நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் சிறப்பு நாளில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. அந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமும், ஓ.டி.டி.யில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. அது இப்போது உறுதியாகியிருக்கிறது. மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ என்ற ஓ.டி.டி. இணையதள நிறுவனம் வெளியிடுகிறது.