‘முதல்வரை தரக்குறைவாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக, வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர், பாபு முருகவேல் டிஜிபி திரிபாதியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
நேற்று முன்தினம் கடலூர், காட்டுமன்னார் கோவில் பகுதியில் திமுகவின் கட்சி நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ‘‘அதிமுக அரசை செருப்பால் அடித்து விரட்ட வேண்டும்’’ என்று விமர்சனம் செய்துள்ளார். இந்தப் பேச்சானது முதல்வரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் நோக்கிலும், பொதுமக்கள் மத்தியில் முதல்வர் மற்றும் அரசு மீது வெறுப்புணர்வை தூண்டி பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இதே போல் கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டம், குத்தாலத்தில் காவல்துறை அனுமதியை மீறி கூட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவருடைய தொண்டர்கள் மத்தியில் பேசும் போது, தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை இயக்குனரையே சவால் விடும் வகையிலும், காவல்துறை அதிகாரிகள் சுதந்திரமாக பணி செய்வதை தடுக்கும் விதமாக பேசினார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசி வரும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.