திருநெல்வேலி,
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக அணைகளிலிருந்து நான்காவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக கன்னியாகுமரி அருகே கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.15 அடியாகவும் அணையில் நீர்வரத்து 2465.63 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 2360.18 கன அடியாகவும் இருந்தது.
சேர்வலாறு அணையில் நீர் மட்டம் 141.73 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 117.50 அடியாகவும் அணையில் நீர்வரத்து 3161 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 3149 கன அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து 5100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதையடுத்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் தாமிரபரணி கரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மூழ்கியபடி வெள்ளநீர் செல்கிறது.
மேலும் வயல்களில் உள்ள மழைநீர் தாமிரபரணியில் சேர்வதால் சுமார் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணியில் செல்கிறது. இதையடுத்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறுகளில் குளிக்கவும் படங்கள் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட வைராவிகுளம், ஆலடியூர் பகுதியில் தாமிரபரணி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து 7 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மழை நீடிப்பதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் தொடர்ந்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக விடிய விடிய மழை பெய்து வருவதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.வருவாய் துறையினர், உள்ளாட்சித் துறையினர், காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 254 கன அடியாகவும் உள்ளது. ராமநதி அணையில் நீர்மட்டம் 83 அடியாகவும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது.
இந்நிலையில் குற்றாலம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்துவந்தது. இதனால் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.