யானைக்கவுனி 3 பேர் கொலை வழக்கில் சோலாப்பூரில் ஜெயமாலா உள்பட 4 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்

சென்னை சவுகார்பேட்டையில் மாமனார், மாமியார், கணவர் உள்பட 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை தனிப்படை போலீசார் சோலாப்பூரில் சினிமா பாணியில் சேசிங் செய்து கைது செய்தனர்.

சென்னை சவுகார்பேட்டை, விநாயகர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலி சந்த் (வயது 74). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 11ம் தேதியன்று மாலை 7 மணியளவில் தலி சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் (வயது 70) மற்றும்
மகன் சீத்தல் குமார் (வயது 38) ஆகியோர் வீட்டின் படுக்கையறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.  இதனை அரங்கேற்றியது சீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதரர்கள் என்பது போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்தது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர். அவர்கள் மகாராட்டிரா மாநிலம், புனேவுக்கு காரிலேயே தப்பிச்செல்வது தெரியவந்தது. அதனையடுத்து காசிமேடு இன்ஸ்பெக்டர் ஜவகர், எஸ்ஐ சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் சம்பவம் நடந்த அன்று இரவு விமானம் மூலம் புனேவுக்கு விரைந்தனர். அங்கு சோலாப்பூரில் வைத்து ஜெயமாலா உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அது தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ‘‘இந்தக் கொலை தொடர்பாக சைபர் கிரைம் டெக்கனிக்கல் பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் கொலையாளிகள் புனே தப்பியோடியது தெரியவந்தது. இதில் குற்றவாளிகள் சோலாப்பூரில் இருப்பது தெரியவரவே இன்ஸ்பெக்டர் ஜவகர் டீம் உடனே அங்கு விரைந்தனர். நேற்று முன்தினம் காலை 6.30 மணி அங்கு சென்றபோது போலீசார் கண் முன்பு அவர்கள் எதிர் திசையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் ஸ்பெஷல் டீம் உடனே காரை யூடர்ன் அடித்து திருப்பிச் சென்று சுமார் 1 கிலோ மீட்டர் துாரம் விரட்டிச்சென்றனர். போலீஸ் விரட்டுவதை அறிந்ததும் கொலையாளிகள் வேகமாக காரை செலுத்தி தப்பியோட முயன்றனர். இருந்தாலும் போலீசார் விடாமல் விரட்டிச் சென்று காரில் இருந்த ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் (வயது 32), கொல்கத்தாவை சேர்ந்த ரவீந்திரநாத் (25), விஜய் உத்தம் கமல் (28) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் யானைக்கவுனியில் 3 பேரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 0.32 எம்எம் துப்பாக்கி மற்றும் UP 16 AH 8340 என்ற பதிவெண்ணுடைய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 5 ரவுண்ட் அவர்கள் சுட்டதில் ஆறாவது ரவுண்ட் ஸ்ட்ரக் ஆகி வீட்டுக்குள் கிடந்தது. அந்த குண்டை கைப்பற்றியுள்ளோம். ஏற்கனவே ஜெயமாலா மிரட்டல் விடுத்தது தொடர்பாக யானைக்கவுனி போலீசார் ஒரு ஆட்டோ டிரைவரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கொலையாளிகள் தலிசந்த் வீட்டில் இருந்த லாக்கர் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். அதில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’’ என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!