சென்னை கண்ணகி நகரில் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்து பூஜை செய்து விட்டு தருவதாக கூறி பணம் பறித்து நுாதன கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகளை கைது செய்தனர்.
சென்னை, கண்ணகி நகர் ஓஎம்ஆர் சாலையில் தனயார் ரெஸ்டாரண்ட் நடத்தி வருபவர் விவேகானந்தன் (வயது 42). கடந்த 20ம் தேதியன்றுதான் இந்த ரெஸ்டாரண்ட் புதிதாக துவங்கப்பட்டது. புதிய உணவகம் என்பதால் அன்றைய தினம் அங்கு வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது கடைக்கு வந்த இரண்டு திருநங்கைகள் கடைக்கு பூஜை செய்து தருவதாக கூறி பணம் கேட்டுள்ளனர். அதற்கு விவேகானந்தன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் கடையில் வாடிக்கையாளர்கள் முன்பு அநாகரிகமாக நடந்து விவேகானந்தனை ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் பயந்து போன விவேகானந்தன் தன்னிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாயை திருநங்கைகளிடம் கொடுத்துள்ளார். அதை பூஜை செய்வது போல் நடித்து அந்த பணத்தை கீழே தரையில் வைத்துவிட்டு மீண்டும் பணத்தை கேட்டுள்ளனர். கீழே வைத்த பணத்தை எடுக்கக் கூடாது எனவும் தடுத்துள்ளனர். விவேகானந்தன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் திருநங்கைகள் மீண்டும் அவரை வசை பாடி விட்டு கடையின் கல்லாவில் இருந்த 5 ஆயிரம், பூஜை செய்வதற்காக வாங்கிய 5 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இது குறித்து விவேகானந்தன் கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அதன் மூலம் திருநங்கைகளை போலீசார் அடையாளம் கண்டனர். அதனையடுத்து அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் கண்ணகி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, எஸ்ஐ வனிதா தலைமையிலான தனிப்படை அதே பகுதியில் வசித்து வந்த திரு நங்கைகளான அஸ்வினி (வயது 22), சித்ரா (வயது 27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் வெள்ளிக்கிழமை தோறும் இது போல வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கும் கடைகளாக பார்த்து தகராறில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு இரண்டு திருநங்கைகளையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.