லேப்டாப் திருடன்: சிசிடிவி கேமரா மூலம் சிக்கினான்

சென்னை கிண்டியில் நள்ளிரவில் விடுதி அறைக்குள் புகுந்து லேப்டாப்பை திருடிய நபரை போலீசார் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து 2 மாதங்களுக்குப் பின் கைது செய்தனர்.

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், சார்தார் காலனியைச் சேர்ந்தவர் கிரிதரன் (வயது 28). அங்குள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இரவு வழக்கம் போல சாப்பிட்டு விட்டு அறையில் படுத்து துாங்கினார். மறுநாள் காலை எழுந்த போது அவரது அறையில் வைத்திருந்த இரண்டு லேப்டாப்கள் மற்றும் ரூ. 3,700 பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவில் அவரது அறைக்குள் புகுந்து இந்த திருட்டை நடத்தியிருப்பது தெரியவந்தது. அது தொடர்பாக கிரிதரன் கிண்டி போலீசில் புகார் அளித்தார். அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் கிண்டி உதவிக்கமிஷனர் சுப்பராயன், இன்ஸ்பெக்டர் கர்ணன், எஸ்ஐ ஸ்ரீதர் மற்றும் தலைமைக்காவலர்கள் தாமோதரன், அச்சுதராஜ், ஊர்க்காவல்படை காவலர் சந்தோஷ் அடங்கிய தனிப்படையினர் இந்த திருட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் அறையினுள் நுழைந்து லேப்டாப்களை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் லேப்டாப்பை திருடிச்சென்ற நபர் கள்ளக்குறிச்சி, கீழதெரு ஜவுளிபாளையத்தைச் சேர்ந்த ராஜதுரை (வயது 23) என்பது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக நடத்திய தேடுதல் வேட்டையில் திருச்சியில் பதுங்கியிருந்த ராஜதுரையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 11 லேப்டாப்கள், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Translate »
error: Content is protected !!