வாட்ஸ்அப் குழு தொடங்கி பண மோசடி: பலே ஆசாமி கைது

வாட்சப்பில் குரூப் தொடங்கி, குறைந்த விலைக்கு துணிகள் தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் மோசடியில் ஈடுபட்ட பலே ஆசாமியை சென்னை புளியந்தோப்பு சைபர்கிரைம் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். இவரது செல்போன் எண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டது. அதனைத் தொடங்கிய குரூப் அட்மின் குறைந்த விலைக்கு சுடிதார் மற்றும் பெண்களின் துணிமணிகள் வழங்குவதாக படத்துடன் செய்திகள் வெளியிட்டுள்ளார். அதனை நம்பிய இந்திரா பிரகாஷ் அவற்றில் சில துணிமணிகளை ஆர்டர் செய்தார். அவற்றை தனக்கு அனுப்பி வைக்கும்படி வாட்சப் குரூப்பில் வந்த வங்கிக்கணக்கு எண்ணிற்கு பணத்தை அனுப்பினார். மேலும் அந்த குரூப்பில் பலரும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு நீண்ட நாட்களாக பொருட்களை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டது தெரியவந்ததும் அது தொடர்பாக இந்திரா பிரகாஷ் புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்தார். புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ராஜேஷ்கண்ணா மேற்பார்வையில் புளியந்தோப்பு காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் வாட்சப் குழுவின் நிர்வாகி தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பவரை கைது செய்தனர்.

ராஜேந்திரன் புதிதாக வாட்சப் குழு அமைத்து புத்தாடைகளை விரும்பும் பெண்களின் செல்போன் எண்களை பேஸ்புக் மூலம் தேர்ந்தெடுத்து அவர்களை குழுவில் இணைத்துள்ளார். இணையதளத்தில் வரும் புதிய துணிகளின் படங்களை அதில் பதிவேற்றம் செய்து குறைந்த விலைக்கு தருவதாக ஆசைவார்த்தை கூறி பதிவு செய்துள்ளார். விரும்பும் நபர்கள் அவரது வங்கிக்கு பணம் அனுப்பியவுடன் அவர்களை வாட்சப் குழுவில் இருந்து நீக்கம் செய்தும், செல்போன் எண்களை பிளாக் செய்தும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதே போல ராஜேந்திரன் சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. அதனையடுத்து ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் 6 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Translate »
error: Content is protected !!