முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து விஜய் மல்லையாவின் வழக்கு செலவுக்கு பணம் விடுவிக்க லண்டன் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
லண்டன்,
கர்நாடக தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு லண்டன் தப்பி ஓடினார். அவரிடம் இருந்து பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் இங்கிலாந்து கோர்ட்டில் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் அவர் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட அவருடைய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திவால் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சொத்துகள் முடக்கப்பட்டதால் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் தனக்கு எதிராக நடந்து வரும் வழக்குகளில் வக்கீல் கட்டணம் கொடுப்பதற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என்றும் எனவே பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு சொத்தை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும் முடக்கப்பட்ட தனது சொத்தில் 2.8 மில்லியன் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.27 கோடியே 75 லட்சம்) விடுவிக்க வேண்டும் எனவும் வேண்டியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று லண்டன் கோர்ட்டில் நீதிபதி செபாஸ்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விஜய் மல்லையா கோரியபடி அவரது வழக்கு செலவுகளுக்காக பணம் மற்றும் சொத்துகளை விடுவிக்க முடியாது எனக் கூறி உத்தரவிட்டார்.