சென்னையில் விவசாயிகள் பிரச்சினைக்காக 68 வயது முதியவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக்நகர், நல்லான்குப்பம், குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் பெருமாள் (வயது 68). இவரது மனைவி குமுதா (வயது 45). இவர்களுக்கு லோகேஷ் என்ற (வயது 21) மகன் உள்ளான். பெயிண்டிங் வேலை செய்து வந்த பெருமாள் கடந்த 15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் பெருமாளின் மகன் லோகேஷ் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பேன் கொக்கியில் வேஷ்டியால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் பெருமாள் இருந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லோகேஷ் பெருமாளை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் துணையுடன் காப்பாற்றி மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் பெருமாள் வழியிலேயேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் அசோக்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெருமாளின் சட்டைப்பாக்கெட்டில் இருந்த தற்கொலைக் கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ‘‘பலபேர் நாட்டிற்காகவும், மொழிக்காகவும் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். நான் விவசாயிகளுக்காக என் உயிரை துறக்கிறேன். வேளாண் சட்டத்தை ரத்து செய்வதால் அரசுக்கு எந்த பாதிப்புமில்லை. கார்ப்பேரட் முதலாளிகளுக்கும் எந்த நஷ்டமும் இல்லை. அதனால் முன்பு இருந்த நடைமுறை இருப்பதில் தவறு ஏதும் இல்லையே. என் தற்கொலை விவசாயிகளின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியாகும் என நம்புகிறேன். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறள் வரிகளே இதற்குப் பொருந்தும்’’ என பெருமாள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது இறப்பு தொடர்பாக போலீசாரின் பெருமாளின் மனைவி, மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்காக தற்கொலை பெருமாள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.