மதுரையில் நேற்றிரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. மேலும் வைகை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், வைகை ஆற்று நீரில் பாய்ந்து செல்லும், யானைக்கல் பகுதியிலுள்ள தடுப்பணையில் 20 அடி உயரத்திற்கு நுரை பொங்கி எழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆற்றில் இருந்து பஞ்சு போல் பறக்கும் நுரையானது, வீடுகளின் மீதும் படிந்து கிடக்கிறது. இதனையறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் வைகையாற்று பகுதியில் குவிந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி நுரையை கலைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் அதிகளவு சாக்கடை நீர் மற்றும், தொழிற்சாலை ரசாயண கழிவுகள் கலப்பதால் அதிகளவில் நுரை பொங்குவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே வைகையாற்றில் பொங்கும் நுரையை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், இன்னும் ஒரே ஆண்டில் வைகையாறு எழில்மிகு வைகை ஆறாக மாற்றப்படும் எனக்கூறினார்.