அதிமுக கூட்டணியில் அமமுக…அமித் ஷா..எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோருடன் 2 மணி நேர ஆலோசனை.?

சென்னை,

தொகுதி பங்கீடு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் .பன்னீர்செல்வம் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருந்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, இரவு முதல் நள்ளிரவு வரை இந்த பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றது. இது வெறுமனே தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை மட்டும் கிடையாது. அமமுக கட்சியை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வைப்பது பற்றியும் அதில் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவில் சேர்வதற்கு சசிகலா விருப்பம் தெரிவித்து வந்தாலும் கூட கட்சித் தலைமை அதை ஏற்பதாக இல்லை. இந்த நிலையில்தான் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அமித் ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வாங்கிய வாக்கு சதவீதம், 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அந்தக் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் ஆகியவற்றையும் விரிவாக விளக்கி சொல்லி உள்ளார் அமித் ஷா.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை தனித்து போட்டியிட அனுமதித்தால் வாக்குகள் பிரிவடைந்து திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறிவிடும், அதிலும் குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்குகள் அதிகம் சிதறும் என்று அப்போது அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் .பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இந்த யோசனையை ஏற்க தயக்கம் காட்டியுள்ளனர்.

நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான்.. ஆனால் இதெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலவரம்.. இப்போது டிடிவி தினகரன் கட்சிக்கு சுத்தமாக செல்வாக்கு கிடையாது. கடந்த இரண்டு வருடங்களில் அதிமுக அரசு அறிவித்த பல நலத்திட்டங்கள் காரணமாக மக்களிடையே ஆதரவு அலை வீசுகிறது.

கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்களில் வாங்கிய கடன் தள்ளுபடி போன்ற உத்தரவுகள் மூலமாக அரசின் இமேஜ் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.. எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி வாக்குகளை பிரிக்க வாய்ப்பே கிடையாதுஎன்று அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டனர்.

இதன் மூலமாக, அதிமுக தலைமை இந்த விஷயத்தில் தொடர்ந்து உறுதி காட்டுவது உறுதியாகியுள்ளது. இதனிடையே பாஜக டெல்லி தலைமை நேரடியாக டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மாநிலத்திலுள்ள பாஜக, அதிமுக உடனான கூட்டணி விவகாரங்களை மட்டும் பார்த்துக் கொள்ளுமாறும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விவகாரத்தில் டெல்லி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!