பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அடிக்கடி விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்தும் புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் அண்ணாசிலை அருகே (02/03/2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “பா.ஜ.க.வினர் விமானம் மூலம் கோடி கோடியாகக் கொண்டு வந்து கொடுத்து காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த எட்டப்பன்களைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.
புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி நிதி கொடுத்ததாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலில் இருந்து நான் விலகுகிறேன். இல்லை என்றால் அமித்ஷா அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும். எனது சவாலை ஏற்க அமித்ஷா தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து பேசிய நாராயணசாமி, “காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.விற்கு சென்றவர்கள் நடுத்தெருவிற்கு வருவார்கள். துணை நிலை ஆளுநர் தமிழிசை முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுபவர்.
‘தாமரை மலரும்‘ எனக் குதித்த தமிழிசை தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டவர். புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகத்தில் அமர்ந்து தமிழிசை அற்ப்பத்தனமாக ஆசைப்படுகிறார். கரோனா பரவல் இருக்கும் நிலையில் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் எனத் தமிழிசை கூறியது மாணவர்களைப் பாதிக்கும். இதை உடனடியாக தமிழிசை திரும்பப்பெற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.எஸ்.சுப்பிரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.