அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.
பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்த போராட்டம் பற்றி டிரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன.
இதனால், தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் தடுக்கும் வகையில், டிரம்பின் 3 டுவிட்டர் பதிவுகளை அந்த நிறுவனம் நீக்கியது. அவற்றில் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டது. பேஸ்புக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றிய வீடியோவை நீக்கியுள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனமும் டிரம்பின் கணக்கை 24 மணிநேரம் முடக்கம் செய்து நேற்று அறிவித்தது. இதுபற்றி அந்நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொஸ்சேரி கூறும்பொழுது, அதிபர் டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு பக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், எங்களுடைய நிறுவனத்தின் 2 கொள்கை விதிகளை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால், அந்த கணக்கு 24 மணிநேரம் முடக்கப்படுகிறது.
அந்த நேரத்தில், சமூக பக்கத்தில் அவரால் பதிவு எதுவும் வெளியிட முடியாது என தெரிவித்து உள்ளார். வன்முறை சம்பவம் பற்றி போலீசார் கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் கதவை உடைத்து அத்துமீறி நுழைய முயன்றனர். அந்த கும்பல் மீது நடத்தப்பட்ட போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதேபோன்று மருத்துவ சிகிச்சையில் பலனின்றி 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்தனர்.
கலகத்துடன் தொடர்புடைய 52 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் கூறினர். இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தலில் பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் மீண்டும் நடந்தன. இதற்காக இரு அவையை சேர்ந்த உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்தனர்.
இந்நிலையில், அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் சபை எனப்படும் எலக்டோரல் காலேஜ் முடிவுகளின்படி, பைடனுக்கு ஆதரவாக 306 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாக 232 ஓட்டுகளும் கிடைத்து உள்ளன. இதன் முடிவுகளுக்கு ஏற்ப பைடன் வெற்றியாளர் என நாடாளுமன்றம் முறைப்படி சான்றளித்தது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை ஏற்று கொள்ளாமல் இருந்து வந்த டிரம்ப் ஒருவழியாக தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்.
நாடாளுமன்றத்தில் நடந்த மிக பெரும் கலவரத்துக்கு மத்தியில் ஜோ பைடனின் வெற்றிக்கு சான்று அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் முடிவுகளில் நான் முற்றிலும் உடன்படவில்லை என்றாலும் உண்மைகள் என்னை தாக்கினாலும் ஜனவரி 20ந்தேதி ஒரு ஒழுங்கான மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
நமது நாட்டு குடிமக்களுக்கு, அதிபராக சேவை செய்தது என்னுடைய வாழ்நாளில் எனக்கு கிடைத்த கவுரவம். என்னுடைய ஆதரவாளர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர் என நான் அறிவேன். ஆனால், நம்முடைய பிரகாசமிக்க பயணம் தற்பொழுதிருந்தே தொடங்கியுள்ளது என்பது பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து டிரம்ப், நாடாளுமன்றத்தில் ஊடுருவியவர்கள் அமெரிக்க ஜனநாயகத்தின் வேரறுத்து உள்ளனர். வன்முறை மற்றும் நாசகார செயல்களில் ஈடுபட்டவர்கள் நமது நாட்டை பிரதிபலிப்பவர்கள் இல்லை. சட்டமீறலில் ஈடுபட்டவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.