சென்னை அமைந்தகரையில் பிரைட் ரைஸ் தராததால் ஆத்திரமடைந்த காவலர்கள் குடிபோதையில் ஓட்டல் கேஷியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை, அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் ஆரோக்கிய பவன் என்ற தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி வாடிக்கையாளர்கள் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் வெற்றிவேலன், ஏழுமலை ஆகியோர் ஓட்டல் கேஷியர் ஆறுமுகம் என்பவரை எச்சரித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் சாப்பிட்டவுடன் உடனடியாக ஓட்டலை மூடி விடுவதாக கேஷியர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இருப்பினும் மூடுவதற்கான ஆயத்த பணியில் ஓட்டல் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறுபடியும் அந்த இரண்டு காவலர்களும் அங்கு வந்தனர். பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஹோட்டலில் ப்ரைட் ரைஸ் இல்லை காலியாகி விட்டது என ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்து காவலர்கள் இருவரும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறுமுகத்தை காவலர்கள் இருவரும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இந்நிலையில் ஆறுமுகத்தின் மர்ம உறுப்பில் போலீசார் தாக்கியதால் அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஆறுமுகம் சிகிச்சை பெற்றார். அமைந்தகரை காவல் நிலையத்தில் தான் தாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நசீமா இரண்டு காவலர்களையும் அழைத்து எச்சரித்துள்ளார். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைந்தகரை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.