அரசின் நிர்வாகத்தினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக, 2011ஆம் ஆண்டிலிருந்து, 6 புதிய மாவட்டங்கள், 18 புதிய வருவாய் கோட்டங்கள் மற்றும் 92 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
2011ஆம் ஆண்டிலிருந்து, பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் 10 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், 43 வருவாய்க் கோட்டங்கள் மற்றும் 203 வட்டாட்சியர் அலுவலகங்கள் கட்டப்பட்டு, அவற்றில் போதிய பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நம் மாநிலத்திலுள்ள மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்காக 8 சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது, இத்திட்டங்களின் கீழ் 33.60 இலட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களுக்காக, 2010–11ம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில் 1,083.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை உயர்த்தி, 2021–22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 4,316.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உரிய நேரத்தில் உதவி பெறும் வகையில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டமானது 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 2,058 கோடி ரூபாய் செலவில் 28,58,092 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் இன்று வரையில் 25,32,732 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமான வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்த குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்வதற்கான சிறப்புத் திட்டம், மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆட்சேபணையில்லாத புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகள் வரன்முறைப்படுத்தப்பட்டு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆட்சேபணையுள்ள புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களில் தகுதியானவர்களுக்கு, மாற்று வீட்டுமனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கண்டறியப்பட்ட 1,36,481 ஆட்சேபணையில்லாத புறம்போக்கு நிலங்களில், 60,203 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.