தேனி மாவட்டம் முத்தாலம்பாறை ஊராட்சி அரசுப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கிராமமக்கள் சார்பில் ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி தலுகா கடமலைமயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தாலம்பாறை பகுதியில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், 8ஆம் வகுப்பு முடித்த மாணவர்களை, 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாய்க்கால் பாறை மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.இதனால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள், அவர்களை இடைநிறுத்தம் செய்யும் சூழல் நிலவும் வருகிறது. மேலும், ஆண் குழந்தைகளும் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு மாணவர்களை சேர்க்க தயக்கம் காட்டி வரும் இந்த பகுதி மக்கள், முத்தாலம் பாறை அரசு பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இன்று கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை சந்தித்து, பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மனு வழங்கினர்.